フォローお願い
iBookstore
Android app on Google Play
好きです!
A programme by
ஏலியன் உலகத்தில் நீல வானத்தைக் கண்டறிந்த சிறிய தொலைநோக்கிகள்
2015年12月7日

தெளிவான நீல வானம் எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் வானம் ஏன் நீல நிறமாக இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? ஏன் அது பச்சையாகவோ அல்லது மஞ்சளாகவோ அல்லது பிங்க் நிறத்திலோ இல்லை? இதற்கான விடை பூமியின் மேற்பரப்பைச் சுற்றியிருக்கும் துணிக்கைகளில் இருக்கிறது. இப்படியாக பூமியை போர்வை போலச் சுற்றியிருக்கும் துணிக்கைகளை நாம், வளிமண்டலம் என்று அழைக்கிறோம்.

பூமியின் வளிமண்டலம் பில்லியன் கணக்கான அணுத்துணிக்கைகளைக் கொண்டுள்ளது. இவை வெறும் கண்களால் பார்க்கமுடியாதளவு மிகச்சிறியவை, ஆனாலும் இவை பூமியில் உள்ள உயிர்களின் அடிப்படையாகும். இவை நாம் சுவாசிக்க ஆக்ஸிஜனைத் தருகின்றன, மேலும் விண்வெளியில் இருந்துவரும் ஆபத்தான பிரபஞ்சக்கதிர்வீச்சில் இருந்து எம்மைக் காக்கின்றன. அதுபோல இரவில் வரும் அதீத குளிரில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றன.

சூரியனில் இருந்துவரும் ஒளி பூமியின் வளிமண்டலத்தை அடையும்போது, பெரும்பாலான நிறங்கள் எந்தவொரு சிக்கலுமின்றி பூமியின் மேற்பரப்பை அடைகின்றன. ஆனால் நீல நிறம் மட்டும், வளிமண்டலத்தில் இருக்கும் துணிக்கைகளில் முட்டிமோதி, எல்லாத்திசைகளிலும் சிதறடிக்கப்படுகின்றன. இதனால் வானம் நீலநிறமாகத் தெரிகின்றது. இந்த செயன்முறையை ரேலீ சிதறல் (Rayleigh scattering) என்று அழைகின்றார்கள்.

கடந்த வாரத்தில் LCOGT வானியலாளர்கள் இந்த மாதிரியான ரேலீ சிதறலை, தொலைவில் உள்ள வேறொரு ஏலியன் உலகத்தில் கண்டுள்ளனர். இதற்காக இவர்கள் பயன்படுத்தியது, LCOGT யின் ஒரு மீட்டார் வலைபின்னல்த் தொலைநோக்கிகளையாகும். இதற்கு முன்னர், இப்படியான கண்டுபிடிப்புகளுக்கு பாரிய தொலைநோக்கிகளைப்  பயன்படுத்தியுள்ளனர்.

சூரியத்தொகுதிக்கு அப்பால் உள்ள ஒரு கோளின் வளிமண்டலத்தின் நிறத்தை, இவ்வளவு சிறிய தொலைநோக்கிகளைக் கொண்டு கண்டறிந்தது இதுவே முதன்முறையாகும். இந்தக் கோள், பூமியைப் போல நான்கு மடங்கு பெரியது. (அண்ணளவாக நெப்டியூன் அளவு) மேலும் இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், சிறிய தொலைநோக்கிகள் கூட, தொலைவில் இருக்கும் கோள்களைப் பற்றி ஆராய உதவும் என நிருபிக்கப்பட்டுள்ளது.

ஆர்வக்குறிப்பு

LCOGT யின் ரோபோ தொலைநோக்கிகள் பாடசாலை மாணவர்களால் பிரபஞ்சத்தை ஆய்வுசெய்யப் பயன்படுகிறது. உங்களாலும் இந்த ஒரு மீட்டார் தொலைநோக்கியைப் பயன்படுத்த முடிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதனை unawe@cardiff.ac.uk என்கிற ஈமெயில் முகவரிக்கு தெரிவிப்பதன் மூலம், இந்தத் தொலைநோக்கியை பயன்படுத்தும் சந்தர்பத்தைப் பெற்றிடுங்கள்!

M Sri Saravana, UNAWE Sri Lanka

Share:

Printer-friendly

PDF File
957.4 KB