フォローお願い
iBookstore
Android app on Google Play
好きです!
A programme by
சிறிய அரக்கனும் பெரிய மர்மமும்
2020年3月30日

நீங்கள் ஆடை வாங்க கடைக்கு சென்றால் முதலில் உங்கள் ஆடையின் அளவைக் கண்டறிய வேண்டும் - சிறிய, மத்திம, பெரிய என பல அளவில் ஆடைகள் உண்டு. உங்களுக்குத் தெரியுமா இந்தப் பிரபஞ்சத்தின் கறுப்பு அரக்கர்களான கருந்துளைகளும் பல அளவுகளில் இருக்கின்றன.

கருந்துளைக்கு அருகில் வரும் எந்தப் பொருளையும் இழுத்து கபளீகரம் செய்துவிடக்கூடியவை இந்தக் கருந்துளைகள். மிக வேகமான ஒளி கூட கருந்துளைக்கு மிக அருகில் வந்தால் தப்பிக்க முடியாது! இதனால்த்தான் கருந்துளைகள் கறுப்பாக இருக்கின்றன. ஆனால் இந்தக் கருந்துளைகள் துளைகளோ அல்லது காலியானவையோ அல்ல. உண்மையில் கருந்துளையுள்ளே அளவுக்கதிகமான பருப்பொருட்கள் மிக மிக நெருக்கமாக சிறியளவு பிரதேசத்தினுள் அடைக்கப்பட்டுள்ளன.

பால்வீதி போன்ற விண்மீன் பேரடைகளின் மத்தியில் இருக்கும் பெரும்திணிவுக் கருந்துளைகள் பற்றி விண்ணியலாளர்களுக்கு நன்றே தெரியும். இவற்றைவிடச் சிறிய, விண்மீன்கள் வெடித்து இறக்கும் தருவாயில் உருவாகும் சிறிய கருந்துளைகளும் உண்டு. இந்த இரண்டு அளவிற்கும் இடையில் மத்திம அளவிலும் கருந்துளைகள் உண்டு. ஆனால் அவற்றை கண்டறிவது மிகக் கடினமான விடையம்.

மத்திம-திணிவுக் கருந்துளைகள் என அழைக்கப்படும் கருந்துளைகள் இருப்பதற்கான ஆதாரத்தை NASA/EAS வின் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. கருந்துளைகள் உருவாகி வளரும் வாழ்க்கை வட்டத்தை விளங்கிக்கொள்வதில் இருக்கும் ஒரு இடைவெளியாக இந்த மத்திம திணிவுக் கருந்துளைகள் கருதப்படுகின்றன. இதுவரை நாம் மிகச் சொற்ப அளவான மத்திம திணிவுக் கருந்துளைகளையே கண்டறிந்துள்ளோம்.

பொதுவாக இம்மாதிரியான மத்திம திணிவுக் கருந்துளைகளை கண்டறிவதில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் இவை பெரும் திணிவுக் கருந்துளைகளை விட சிறியவை என்பதுடன் இவற்றுக்கு அருகில் வேறு எந்தவொரு பொருளும் இல்லாதிருப்பதால் கருந்துளைகளை சுற்றிக் காணப்படும் சுழற்சித் தட்டு மற்றும் கதிர்வீச்சுகள் என்பன வெளிப்படையாக இருக்காது. மேலும் இவற்றின் ஈர்ப்புவிசை தொடர்ச்சியாக அருகில் இருக்கும் விண்மீன்கள் மற்றும் தூசுகளை கபளீகரம் செய்ய போதுமானதாக இருக்காது. ஆனாலும் துரதிஷ்டவசமாக ஏதாவது விண்மீன் இதற்கு அருகில் வந்துவிட்டால் அதனை இது வெறுமனே உறுஞ்சிவிடாது. இந்த நிகழ்வு மிகப் பிரகாசமான நிகழ்வாக இருக்கும் - இதனை விண்ணியலாளர்கள் அவதானிக்கக்கூடியதாக இருக்கும். இப்படித்தான் புதிதாக கண்டறியப்பட்ட மத்திம திணிவுக் கருந்துளையை ஹபிள் தொலைநோக்கி மூலம் ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர்.

படவுதவி: ESA/Hubble, ESO, M. Kornmesser

ஆர்வக்குறிப்பு

இப்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள மத்திம திணிவுக் கருந்துளை நமது சூரியனைப் போல 50,000 மடங்கு திணிவானதாகும்.

M Srisaravana, UNAWE Sri Lanka

Share:

Printer-friendly

PDF File
941.5 KB